சிறுதானியங்கள் பீட்சா வழங்கியவர் : வள்ளி இராகவன் தேவையான பொருட்கள்: ராகி மாவு - அரை கப் கம்பு மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு பீட்சா சாஸ் - கால் கப் Mozzarella cheese - கால் கப் செய்முறை: ராகி மாவு, கம்பு மாவு மற்றும் உப்பு இவற்றை நன்றாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் அடை மாவு போல கெட்டி பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் 2 கரண்டி மாவு வார்த்து கெட்டியான ஊத்தப்பம் போல வார்த்து, மிதமான தீயில் வேக வைக்கவும். அரைவேக்காடு ஆனவுடன், அதன் மேல் பீட்சா சாஸ் தடவி, சீஸ் தூவி, உங்களுக்கு பிரியமான காய்கறி டாப்பிங்குகளை தூவி மூடி வைக்கவும். வெந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி, மேலும் தேவைக்கும் சுவைக்கும் ஏற்றாற்போல சீஸை தூவிவிட்டு பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான சிறுதானிய பீட்சா தயார்.
தினை வெஜ் பர்கர் வழங்கியவர் : சிவகாமி கோவிந்தராஜ் தேவையான பொருட்கள்: தினை -1/4 கிண்ணம் கொண்டைகடலை - 1/2 கிண்ணம் (வேகவைத்தது) மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு தூள் -1/2 தேக்கரண்டி கேரட், வெங்காயம் - 1 பூண்டு - 3 பல் புரோக்கோலி, காளிஃபிளவர் - 1/2 கிண்ணம் (துருவியது) கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பிரட் தூள் - 1/4 கிண்ணம் செய்முறை: தினையை உதிரி உதிரியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட், புரோக்கோலி, காலிஃபிளவர் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி பின்பு மற்ற காய்கறிகளைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பிறகு காரத்திற்குத் தேவையான மிளகாய் தூள், மிளகு சேர்த்து, பின் மசித்த கொண்டை கடலை மற்றும் தினையை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து இறக்கவும். நன்றாக ஆறிய பின் Patties வடிவில் தயார் செய்து பிரட் தூளில் புரட்டி எடுத்து தவாவில் லேசாக இரண்டு பக்கமும் சிவக்கும் வரை சூடேற்றி பின்பு 370' F க்கு முன் சூடு செய்த அவனில் வைத்து 20 நிமிடம் வைத்து எடுத்தால் பர்கருக்கான Patties தயார்.
வரகு பறவை கூடு வழங்கியவர் : ராதிகா வரதராஜலு தேவையான பொருட்கள்: 1. வரகு சேமியா 180 கி 2. வேகவைத்த உருளைக்கிழங்கு (6) 3. புதினா (அலங்கரிக்க) 4. நறுக்கிய வெங்காயம் (1/4 கிண்ணம் ) 5. துருவிய கேரட் (1/4 கிண்ணம் ) 6. நறுக்கிய பீன்ஸ் (1/4 கிண்ணம் ) 7. பட்டாணி (1/4 கிண்ணம் ) 8. நறுக்கிய பச்சைமிளகாய் (2) 9. மிளகாய் தூள் (1 தேக்கரண்டி ) 10. கரம் மசாலா தூள் (1/2 தேக்கரண்டி ) 11. உப்பு தேவையான அளவு 12. மைதா மாவு (6 தேக்கரண்டி ) 13. சோள மாவு (1 தேக்கரண்டி ) 14. எண்ணெய் தேவையான அளவு செய்முறை : வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, சிறிதளவு எடுத்து முட்டைகளை செய்து வைக்கவும். நறுக்கி வைத்த காய்கறிகளை சிறிதளவு எண்ணெயில், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி வைக்கவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கையும் வதக்கிய காய்கறிகளையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் . கலந்த கலவையை உருண்டைகளாக்கி கிண்ணம் வடிவத்தில் செய்து கொள்ளவும். மைதா மாவையும் சோள மாவையும் சிறிது தண்ணீர் விட்டு கலக்கி, செய்து வைத்த கிண்ணங்களை அதில் முக்கி எடுக்கவும். பின்னர் அதை வரகு சேமியாவில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும். எண்ணெயில்லாமல் Air Fryer யில் பொரித்து கொள்ளலாம். முதலில் செய்து வைத்த உருளை முட்டைகளையும் புதினா இலைகளையும் வைத்து பறவை கூடு போல் அலங்கரித்து பரிமாறவும்.
இரு நிமிட பிரவுனி வழங்கியவர் : வள்ளி இராகவன் தேவையான பொருட்கள்: மைதா அல்லது ஆல்பர்ப்பஸ் மாவு - 3 தேக்கரண்டி கொக்கோ பவுடர் - 2 தேக்கரண்டி சீனி - 2 தேக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை 3 தேக்கரண்டி பால் 2 தேக்கரண்டி எண்ணெய் அரைத் தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் செய்முறை: மைதா, கொக்கோ பவுடர், உப்பு மற்றும் சீனி அனைத்தையும் ஒரு முள்கரண்டியால் கிளறிவிட்டு கலக்கவும். இதனுடன் பால், எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் மூன்றையும் நன்றாக கட்டி இல்லாமல் கலந்து ஒரு சீரான மாவாக கரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தேக்கரண்டி சாக்லேட் சிப்ஸை சேர்த்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைத்து வேகவைக்கவும். பின்னர் மேலகா சாக்லேட் அல்லது சீனி பவுடரை தூவி அழகு படுத்தவும்
குதிரைவாலி சுஷி வழங்கியவர் : சத்யா பழனிவேல் தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி Nori sea weed sheet - 2 வேகவைத்த குதிரைவாலி - 1/2 கிண்ணம் கேரட் நீளமாக நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் நீளமாக நறுக்கியது வெள்ளரிக்காய் நீளமாக நறுக்கியது சோயா சாஸ் - 1.5 மேசைக்கரண்டி ரைஸ் வினிகர் -1 மேசைக்கரண்டி சாலமன் ஃபில்லட்ஸ் ஃபிரை (optional) செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, வேகவைத்த குதிரைவாலி சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, சோயா சாஸ் மற்றும் ரைஸ் வினிகர் சேர்த்து வதக்கவும். இதை வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகள் (அவகாடோ, வெள்ளரிக்காய் தவிர) அனைத்தையும் லேசாக வதக்கவும். நோரி சுஷி ஷீட்டை ஒரு வேக்ஸ் பேப்பர் மீது வைத்து, அதன் மேல் குதிரைவாலியை நன்றாக பரப்பவும். அதன் மேல் காய்கறிகளையும், சாலமன் ஃபில்லட்ஸையும் பரப்பவும். அதன் பின்னர் அந்த நோரி ஷீட்டை அழுத்தமாக உருட்டி, சிறிய துண்டுகளாக வெட்டவும். அசைவம் சாப்பிடாதவர்கள் சாலமன் ஃபில்லட்ஸை தவிர்த்துவிடலாம். ஹாட் சாஸ் மற்றும் சோயா சாஸுடன் பரிமாறவும்.
சீமைத்தினை தயிர்சாத ஃபிரிட்டர்ஸ் வழங்கியவர் : சசிகலா கணேஷ் தேவையான பொருட்கள்: தயிர்சாதம் செய்ய : சீமைத்தினை (quinoa ) தயிர் கடுகு கறிவேப்பிலை பச்சைமிளகாய் கொத்தமல்லி இஞ்சி பெருங்காயம் ஊறுகாய் உப்பு தேவையான அளவு ஃபிரிட்டர்ஸ் செய்ய : பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சோளமாவு ஓட்ஸ் கிரம்ஸ் செய்முறை: QUINOA வாவில் தயிர்சாதம் உருண்டை பிடிக்கும் அளவு கெட்டியாக செய்துகொள்ள வேண்டும். அதன் உள்ளே ஊறுகாய் வைத்து உருண்டை பிடித்து முதலில் சோளமாவில் உருட்டி எடுத்து பின்பு ஓட்ஸ் பவுடரில் உருட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான QUINOA CURD RICE FRITTERS ரெடி
சிறுதானிய கப் கேக் வழங்கியவர் : மகாலட்சுமி இராமசாமி தேவையான பொருட்கள்: கம்பு மாவு - 1 கிண்ணம் ராகி மாவு - 1 கிண்ணம் பேக்கிங் பவுடர் -2 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி பட்டை தூள் - 2 மேசைக்கரண்டி தேங்காய் பவுடர் - 1 கிண்ணம் அரைக்க தேவையானவை: எண்ணெய் - 1 கிண்ணம் ப்ரவுன் சுகர் - 1.5 கிண்ணம் ஆப்பிள் - 2 கேரட் - 2 வாழைப்பழம் - 1 ஆளி விதை பவுடர் (Flax seed) - 4 tbs (or 4 egg) தண்ணீர் - 1 கிண்ணம் (முட்டை சேர்த்தால் தேவையில்லை) செய்முறை: அரைக்க தேவையானவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள பொருட்களை சலித்துக் கொள்ளவும். சலித்த பொருட்களையும், அரைத்து வைத்த பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதனோடு தேங்காய் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவு இட்லி மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். கப் கேக் ட்ரேயில் மாவை ஊற்றி வைக்கவும். 350' F சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். தேவைப்பட்டால் 5-10 நிமிடங்கள் சேர்த்து வேகவைக்கவும். சிறுதானிய மக் கேக்: வழங்கியவர் : மகாலட்சுமி இராமசாமி தேவையான பொருட்கள்: கம்பு மாவு - 2 மேசைக்கரண்டி ராகி மாவு - 1 மேசைக்கரண்டி ஆளி விதை பவுடர் - 1 மேசைக்கரண்டி பட்டை பவுடர் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1/8 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1/8 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி வெல்லம் - 2 மேசைக்கரண்டி தண்ணீர் - 1/4 கிண்ணம் துருவிய ஆப்பிள் - 1/4 கிண்ணம் துருவிய கேரட் - 1/4 கிண்ணம் செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு கப்பில் சேர்த்து நன்றாக கலக்கவும். மைக்ரோ வேவ் அவனில் ஒன்றரை நிமிடம் வைக்கவும். தேவைப்பட்டால் மேலும் 5-10 நொடிகள் வைக்கவும். மேலே தேங்காய் துருவல், ஐஸ்க்ரீம் அல்லது விப் க்ரீம் போட்டு சாப்பிடலாம்.
கேழ்வரகு இடியாப்பக் கொழுக்கட்டை வழங்கியவர் : அருள்நங்கை தயாளன் தேவையான பொருட்கள்: இடியாப்பம்: வறுத்த கேழ்வரகு மாவு - 2 கிண்ணம் அரிசி மாவு - 1 கிண்ணம் உப்பு - 1 மேசைக்கரண்டி சுடுதண்ணீர் பூரணம்: வெல்லம் - 1 கிண்ணம் தண்ணீர் - 3 மேசைக்கரண்டி பேரீச்சம் பழம் 12 (பொடியாக நறுக்கவும்) பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் 1 மேசைக்கரண்டி துருவிய தேங்காய் 2 கிண்ணம் பூரணம் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர், வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் பேரீச்சம் பழம், தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி ஆற விடவும். இடியாப்பம் செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு சுடுதண்ணீர் ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு பிசையவும். இதனை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து கொள்ளவும். ஆற வைத்த பூரணத்தை இடியாப்பத்திற்கு நடுவில் வைத்து மூடி விடவும். இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லி தட்டில் இடியாப்பங்களை அடுக்கி வேக வைத்து எடுக்கவும். சுவையான இடியாப்பக் கொழுக்கட்டை தயார்.
குதிரைவாலி குர்குரே வழங்கியவர் : சுதா இராமலிங்கம் தேவையான பொருட்கள்: குதிரைவாலி - 1 கிண்ணம் அரிசி மாவு - 1 கிண்ணம் கடலை மாவு - 1 கிண்ணம் சீரகம் அல்லது எள் பூண்டு சிவப்பு மிளகாய் வத்தல் சோம்பு பெருங்காயம் உப்பு கடலை எண்ணெய் செய்முறை: குதிரைவாலியை 8 முதல் 9 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் மிளகாய் வத்தல், பெருங்காயம், உப்பு, சோம்பு மற்றும் பூண்டு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு மிக்ஸியில் அரைக்கவும். அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, எள் சேர்த்து அளவாக உப்பு கலந்து சிறிது சூடான எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். உரலில் ஓலை பக்கோடாவிற்கு பிழிய பயன்படுத்தும் அச்சை போட்டு மாவை நிரப்பிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிழிந்து விடவும். மற்றொரு பக்கம் திருப்பி விட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். சுவையான மொறுமொறு குதிரைவாலி குர்குரே தயார்.
சிறுதானிய மாவு வழங்கியவர் : லலிதா அம்மா தேவையான பொருட்கள்: வரகரிசி - 1 கப் குதிரைவாலி -1 கப் சாமை - 1 கப் செய்முறை: சிறுதானியங்களை நன்றாகக் கழுவி ஒரு துணியில் 30 நிமிடங்கள் காய விடவும். கையில் ஒட்டாத அளவு காய்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளவும். இந்த மாவில் இடியாப்பம், கொழுக்கட்டை (இனிப்பு, காரம்), புட்டு, முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சிறுதானிய பூரி, ரொட்டி செய்யலாம். மிச்சமாகும் குருணையை கேசரி, சாதம் அல்லது இட்லி/தோசை செய்ய பயன்படுத்தலாம்.